உறவோடு..

எழுத்தாளனோ படைப்பாளியோ எவரும் வானத்தில் இருந்து குதித்தவரில்லை. வாழ்வை வாசித்து, வாழ்வில் வாசித்துப் பயணிக்கும் மனிதர்களே. எந்தவித மகுடங்களும் சூட்டிக்கொள்ளாது இயல்பாக எழுதும் பலர் இணையத் தமிழுலகில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சிலரையே அணுகியிருந்தோம். அவர்களிருந்து முதலில் தருபவர் இணைய எழுத்தில் தொடங்கி அச்சு ஊடகத்திற்குச் சென்றிருக்கும் ஒரு அசத்தலான மனிதர்.

அவர் பெயர் யுவகிருஷ்ணா. அப்படிச் சொன்னால் அறிய முடியாவர்களிடமும் லக்கிலுக் என்றால் அடுத்த நொடி புரிந்து விடும். அந்தளவுக்கு அவர் இணையத்தில் பிரபலம். கேட்டால் , சும்மா டைம் பாஸ் மச்சி என்பார். உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் டைம் பாசிங்குக்காக இணையத்தில் எழுதத் தொடங்கியதை, வரைமுறையாக வளர்த்தெடுத்த படிநிலையில் அச்சு ஊடகம் வரை பயணித்திருக்கின்றார். இதுவரையில் இரு புத்தகங்கள், வாராந்தரியில் கட்டுரைத் தொடர் என்ற வளர்ச்சியின் அன்மித்த பரிமாணம், அச்சு ஊடகமொன்றின் இணைஆசிரியர். இதுவொன்றும் சும்மா வந்ததெனச் சுலபமாகச் சொல்லிவிட முடியாது. திட்டமிட்ட உழைப்பு இந்த உயர்வின் பின் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த உழைப்பிற்குரியவரின் அனுபவ வார்த்தைகளில் 4தமிழ்மீடியா பற்றி:-

அதற்குள்ளாக ஒரு ஆண்டு ஓடிவிட்டது என்பது ஆச்சரியம்தான். காலம் இப்போதெல்லாம் ஓடுவதில்லை. சிறகு கட்டிக்கொண்டு உயர உயர பறக்கிறது. ஓராண்டு நிறைவுக்கு ஏதாவது எழுதச் சொல்லி 4தமிழ்மீடியா நிர்வாகம் கேட்டுக் கொண்டது. உண்மையை சொல்லிவிடுகிறேன். நான் இந்த இணையத்தை ஆடிக்கு ஒருமுறை, அமாவசைக்கு ஒருமுறைதான் பாவிக்கிறேன். நானெல்லாம் அச்சுப் பிரியன். அச்சுப் பத்திரிகைகள் வாசிப்பதில் எனக்குள்ள ஆர்வம், ஏனோ மின் ஊடகங்களை பாவிப்பதில் இல்லை. இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் தெளிவாக விளக்க முடியாது. ஒருவேளை அச்சில் வந்த செய்தித்தாளையோ, புத்தகத்தையோ புதுசாய் முகர்ந்துப் பார்க்கும் போது ஏற்படும் கிளுகிளுப்பு, கணினித் திரையை முகரும்போது கிடைக்காததால் இருக்கலாம். நீ ஏனய்யா கணினித்திரையை போய் முகர்ந்துப் பார்க்கிறாய் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படாது. அழுதுடுவேன்!

நான் 4தமிழ்மீடியாவை அதிகமாக பாவித்த காலக்கட்டம் மே 18 வாரத்தில்தான். பல இணையத்தளங்களும், அச்சு ஊடகங்களும் உணர்ச்சிவசப்பட்டு தாங்கள் செய்தியாளர்கள் என்பதையும் மறந்து ஒருவித ஆவேச மனோபாவத்தில் செய்திகளை எழுதிக் கொண்டிருந்தத நேரம் அது. 4தமிழ்மீடியா அந்நேரத்தில் உச்சபட்ச நிதானத்தோடு நடந்துகொண்டது. வழக்கம் போல செய்திகளை செய்திகளாகவே தன்னுடைய இயல்பான குணாதிசயங்களோடு வழங்கி வந்தது. ஒரு நல்ல ஊடகத்தின் பண்பு என்பது இதுவாகத்தான் இருக்கும். இந்த ஊடகத்தை நடத்துபவர்களுக்கு ஏதேனும் சார்புகள் இருக்கலாம். ஆயினும் இந்த ஒருவருட காலத்தில் 4தமிழ்மீடியா யாருக்கு சார்பானது என்பதை அறியமுடியா வகையில் செய்திகளை வழங்கும் விதத்தில் உண்மையான நடுநிலையோடு செயல்படுகிறது என்பதை மனம் திறந்து சொல்கிறேன்.

செய்திகள், விளையாட்டு, ஆன்மீகம், சினிமா, அறிவியல், வணிகம், வாழ்வியல், வலைப்பூ - என்று இந்த இணையத்தின் வகைகள், ஒரு தமிழனின் செய்தித்தேவையை முழுமையாக நிறைவு செய்வதில் ஒரு ஆல்ரவுண்டராக இக்களம் மிளிர்கிறது.

எனக்கு நெருடலாக தெரியும் ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியது இன்னேரத்தில் அவசியமாகிறது. மின் ஊடகம் என்று வந்துவிட்டாலே அது உலகளாவியது. குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் தருவது அல்ல என்ற நிலைக்கு வந்துவிடுகிறது. இப்படியிருப்பின் இன்றும் கூட 4தமிழ் மீடியாவை திறக்கும்போது இது ஈழத்தமிழர்களால் நடத்தப்படுவது என்ற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம் தொடர்பான செய்திகளே அளவில் அதிகமாக முகப்பு பக்கத்தில் தெரிவதால் இதுபோன்ற ஒரு மாயை எனக்கு மட்டும் ஏற்படுகிறதா என்று தெரியவில்லை. இன்றைய நிலையில் ஈழம் தொடர்பான உண்மை நிலவரங்களை தருவது தமிழ்ச்சமூகத்துக்கு மிக அவசியமானது என்றாலும் கூட, ஈழச்செய்திகள் என்று தனிப்பக்கம் அமைத்துக் கொடுக்கலாம். எப்போதும் முகப்பை ஈழமே பெருவாரியாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஒரு நடுநிலையான ஊடகத்தின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவி செய்யாது. செய்திகளை தேடி வருபவர்களுக்கு அது சலிப்பைக் கூடத்தரக்கூடும்.

ஒரு செய்தி ஈழம் தொடர்பானதாக இருந்தாலும், செய்திக்கான முக்கியத்துவத்தைப் பொறுத்தே அதன் அளவு இருக்க வேண்டும். உலகம் முழுக்க தமிழ் சமூகம் பெருவாரியாக வாழும் நாடுகள் இன்று நிறைய இருக்கிறது. ஆனால் மின் ஊடகங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஈழம் - இவற்றைத் தவிர்த்து வேறு நாடுகளில் செய்திகளே இல்லை என்பதைப் போல நடந்துகொள்கின்றன. 4தமிழ் மீடியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களைப் பற்றியும், தமிழர்கள் மத்தியில் நிகழும் நிகழ்வுகள் குறித்தும் அதிகம் வாசிக்க நிறைய பேர் விரும்புகிறார்கள் என்பதை பலரோடு பேசியதில் அறிந்திருக்கிறேன்.

இன்னும் எனக்கு இத்தளத்தில் ஒரு பெரிய பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இத்தளத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் மிக நல்ல தமிழ். ஆனால் இதுவே கூட வெகுஜனங்களை ஈர்க்காமல் போவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும். கொஞ்சம் எளிமைப்படுத்தப்பட்ட தமிழை உபயோகித்தால் இன்னும் நிறைய பார்வையாளர்கள் இத்தளத்தை பாவிப்பார்கள். ஒரு கமர்சியல் ரைட்டர் என்பதால் கமர்சியல் அடிப்படையிலேயே இதை சொல்கிறேன்.

நான் முதலிலேயே ஒப்புக்கொண்டபடி, தினமும் இத்தளத்தை பாவிப்பவனில்லை என்பதால் என்னுடைய இந்த விமர்சனமும் கூட மிகத்துல்லியமானதாக இருக்க முடியாது. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 4தமிழ்மீடியாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
லக்கிலுக்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.