எமதுபார்வை

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட மத அமைப்பொன்றின் கீழ் ஆயராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக எந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி நின்று பணியாற்ற முடியும் என்று நிரூபித்த மனித உரிமைகளுக்கான போராளியாக இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களை குறிப்பிட முடியும். குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நாட்களில் தமிழ் மக்களின் ஈனசுரமாகிவிட்ட குரல்களை சர்வதேச ரீதியில் அடக்குமுறைகள் தாண்டி எடுத்துச் சொல்லும் அடையாளமாக அவர் நிகழ்ந்தார். அதுவும், முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசாங்கத்தின் முன்னாலேயே, அவர்களுக்கு எதிராக சாட்சியமளித்த தைரியசாலி; முன்னோடி.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழர் அரசியல் முள்ளத்தண்டு முறிடிக்கப்பட்ட நிலையை அடைந்திருந்தது. அப்போது, அரசியல் கட்சிகளையும், சிவில் சமூக அமைப்புக்களையும் ஒரே புள்ளியில் இணைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்தியவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை. பல நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து உண்மை நோக்கங்கள் தடுமாறும் தருணங்களில் எல்லாம் இரு தரப்புக்குமான இடைவெளியை குறைத்தவர் அவர். தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனராக, ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட அவர், மக்களின் மனங்களை பிரதிபலித்தவராக செயற்பட்டவர்.

ஆட்சி மாற்றங்களினால் தமிழ் மக்கள் ஜனநாயக உரிமைகளை சற்றேனும் மீட்டெடுக்க முடியும் என்று நம்பிய நேரங்களில் அதற்கு எதிராக புத்திஜீவிகளும், சில அரசியல்வாதிகளும் தேர்தல் புறக்கணிப்பு கோசங்களை முன்வைத்த போது, அதனை வெளிப்படையாக எதிர்த்தவர். தமிழ் சிவில் சமூக அமையத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் 2015 ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் முடிவுகளோடு இருந்த போது, அந்த முடிவு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்று வாதாடியவர். அத்தோடு, மக்களின் ஆணையைப் பெற்ற அரசியல் தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்கிற போலிக் கற்பிதங்களை பலரும் உருவாக்க முற்பட்ட போதெல்லாம், அதற்கு எதிராக நிகழ்கால யதார்த்தங்களின் படிநிலைகளில் நின்று போராடியவர். தமிழ்த் தேசிய அரசியல் களத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முனைந்தவர். தன்னுடைய இறுதிக் காலம் வரையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே போராடியவர்.

ஓர் இறைபணியாளர் அரசியல் உரிமைப் போராளியாக, பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, நீதிக் கோரிக்கைகளை மனதில் ஏந்தி செயற்பட்டு மறைந்திருக்கின்றார். ஈழத் தமிழரின் வரலாறு உள்ளவரை இராயப்பு ஜோசப் ஆண்டகையும் நினைவு கூரப்படுவார். ஏனெனில் அவர் துணிச்சலான முன்னோடி. அவரது ஆன்மா இறையோடு கலக்கட்டும்... சாந்தியடையட்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.