Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி

நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெழ்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 54 பேர் பலியாகி உள்ளதுடன் ஆயிரக் கணக்கான மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறியும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டும் உள்ளனர்.

டினாவ் ஆற்றில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல ஊர்களில் பாலங்கள் மற்றும் பாதைக் கட்டுமானங்கள் உடைபட்டுள்ளன. போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.  கடந்த 2 நாட்களில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 54 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட சுமார் 14 மாவட்டங்களில் ஒன்றான பையுத்தன் இல் மட்டும் 26 பேர் பலியானதாகத் தெரிய வருகின்றது. மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் பெருகி ஓடி வரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.

இதேவேளை கடந்த வருடம் நேபாளத்தை துவம்சம் செய்த நிலநடுக்கத்தால் சேதமடைந்து பின்னர் திருத்தி அமைக்கப் பட்ட வீடுகளில் வசித்த பல மக்களும் அண்மைய வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப் பட்டு மறுபடி உறைவிடங்கள் அற்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். கடந்த வருடம் 9000 பொது மக்களைப் பலிகொண்ட நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்ட சுமார் பத்தாயிரக் கணக்கான மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் நேபாளத்தின் சப்தகோஷி மற்றும் நாராயணி ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து அபாய மட்டத்தை நெருங்கியுள்ளன என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

comments powered by Disqus