Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

சோமாலியாவின் ஐ.நா அலுவலகம் முன் இரு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:13 பேர் பலி

செவ்வாய்க்கிழமை சோமாலியத் தலைநகர் மொகாடிசு இல் அமைந்துள்ள ஐ.நா இன் கண்ணி வெடி அகற்றும் ஏஜன்ஸி மற்றும் இராணுவ சோதனை சாவடி அருகே இரு தற்கொலைக் கார்க் குண்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

மேலும் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு அருகே தான் மொகாதிசு விமான நிலையமும் ஆப்பிரிக்க யூனியன் தளமும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சோமாலியாவில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுவான அல் ஷபாப் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சோமாலியாவில் மிக இறுக்கமான இஸ்லாமிய ஆட்சிக் கொள்கைகளுடன் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் ஷபாப் அங்கு ஆப்பிரிக்க யூனியனில் வெளிநாட்டுப் படைகள் அதிகளவு இருப்பதை எதிர்த்து வருகின்றது. சோமாலியாவின் ஆப்பிரிக்க யூனியன் படைப் பிரிவில் புருண்டி, டிஜிபௌட்டி, கென்யா, சியெர்ரா லெயோனே மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 000 இற்கும் அதிகமான அமைதி காக்கும் படைகள் சேவை செய்து வருகின்றன.

இதேவேளை ஜப்பானில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலியாகி உள்ளனர். டோக்கியோவில் இருந்து 50 மீட்டர்
தொலைவில் சாகாமிஹாரா நகரத்தில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கான பராமரிப்பு மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் செவ்வாய்
அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்ட அனைவரையும் சராமரியாகத் தாக்கியுள்ளார். இதில் 19 பேர்
பலியானதுடன் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் போலிஸ் விரைந்து வந்தது. தாக்குதலில் ஈடுபட்டவர் 2 மணித்தியாலத்தில் தானே வந்து சரணடைந்தார். இவரது பெயர்
விபரம் அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் குறித்த நபர் அந்த மையத்தில் ஏற்கனவே பணி புரிந்தவர் என்றும் தெரிய வருகின்றது. இவரது தாக்குதலின்
பின்னணி குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

comments powered by Disqus