Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் பிளவுபடுத்த முடியாது: பழனி திகாம்பரம்

தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பன் வந்தாலும் பிளவுபடுத்த முடியாது என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

“மலையக மக்கள், 12 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னை அமைச்சராக தெரிவு செய்துள்ளனர். அவர்கள், இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக இடப்பட்ட விதையே, இந்த அமைச்சுப் பதவியாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெரயா, ஊவாக்கலை வெள்ளிமலை வரையில் செல்லும் வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை தடுக்க முயல்பவர்களை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை தானும் செய்வதில்லை, செய்பவர்களைச் செய்யவிடுவதுமில்லை. இந்நிலை தொடர்ந்ததால்தான், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெறாமல் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி எனும் விதை முளையிட்டு ஓங்கி வளருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், அதனை இடையில் வேரறுக்க நினைக்கின்றனர். இது அவர்களின் கனவில் கூட நிறைவேறாது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு என நான்கு மாவட்டங்களிலும் வாழும் மக்கள் ஆதரவளித்துள்ளனர். இதனடிப்படையில், நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைக்கப் பெற்றுள்ள நன்மதிப்பைக் கொண்டு செயலாற்றும் கூட்டணியின் தலைவர்களை பிரிக்க எவராலும் முடியாது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

comments powered by Disqus