Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

40% ஊனம் இருந்தாலே உதவித்தொகை:உத்தரவு பிறப்பித்து 6 மாத காலமாகியும் அமலாகாத சூழல்

40% ஊனம் இருந்தாலே உதவித்தொகை:உத்தரவு பிறப்பித்து 6 மாத காலமாகியும் அமலாகாத சூழலில் ஆகஸ்ட மாதம் .5 ம் திகதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெறும் என்று, உரிய சங்கன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட 4 மாற்றுத்திறனாளி அமைப்புகளின் கூட்டு இயக்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40% சதவீத ஊனம் இருந்தாலே வேறு நிபந்தனை இல்லாமல் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நீடித்த தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் எதிரொலியாக, கடந்த சட்டமன்ற காலத்தின் கடைசி நாளான பிப்.20 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஊனத்தின் சதவீதத்தை 60%-லிருந்து 40% சதவீதமாக குறைப்பதாகவும், வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வேறு நிபந்தனை ஏதுமின்றி உதவித்தொகை பெறத்தக்க வகையில் விதிகளை தளர்த்துவதாகவும் அறிவிப்பில் தெரிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து இரண்டே நாட்களில் பிப்.22 தேதியிட்டு அரசாணை எண்.27 வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த அரசாணை வெளியாகி 6 மாதம் நிறைவடைந்து உள்ளது. எனினும், மாவட்டங்களில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் இந்த அரசாணை பற்றி ஏதும் தெரியாத நிலைமையே உள்ளது. வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மாற்றுத் திறனானிகள் முறையிடுகிறபோது அரசாணை குறித்தோ, அரசின் உத்தரவு குறித்தோ எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. எனவே
எங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவிக்கின்றனர். மேலும், முதலமைச்சரின் இந்த உத்தரவை அமல்படுத்த தேவையான நிதி ஆதாரம் ஏதும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. சட்டமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் செய்வது அறியாது திகைக்கின்றனர்.

எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் உடன் அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 5 ம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும்
பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த எமது சங்கம் முடிவு செய்துள்ளது. சக்தியாக இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும், அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறோம் என்று , தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

comments powered by Disqus