Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல்

வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் கவுல் கூறியுள்ளார். 

நீதிமன்றங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கலாம் எனும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி முதல் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் முற்றுகையிடும் போராட்டத்தையும் இந்த வழக்கறிஞர்கள் நடத்தியதில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி, மிக அசாதாரண சூழல் நிலவியது. 

எனவே, இன்று நடைப்பெற்ற ஒரு வழக்கில் கருத்துத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி கவுல், நேற்று அசாதாரண சூழல் நிலவியதால், நீதிமன்றத்தினுள் வழக்கில் தொடர்புடைய மக்களை அனுமதிப்பது சிரமமாக இருந்தது. இன்று இந்த சூழல் மாறிவிட்ட நிலையில், மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞரால், வழக்கில் வாதாட நீதிமன்றத்தினுள் செல்லும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிற வழக்கறிஞரின் குற்றச்சாட்டையும் கவுல் ஏற்றுக்கொண்டார். 

அதனால், வழக்கறிஞர்கள் தங்களது குறைகளை நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் விவாதிக்கலாம் என்று கூறியாகிவிட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றம் திருத்திய சட்டத் திருத்தத்தின் படி, உடனடியாக வழக்கறிஞர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்றும் உறுதி கொடுத்தாகிவிட்டது. இருப்பினும் இந்த வழக்கறிஞர்கள் எதற்காக போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இவர்களை வழி நடத்த சங்கத் தலைவர்கள் சரியானவர்களாக இல்லை. எனவேதான் வழக்கறிஞர்கள் சிறு பிள்ளைத் தனமாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று நீதிபதி கவுல் கூறியுள்ளார்.

comments powered by Disqus