நீங்கள் மிகச் சிறியளவில் அல்கொஹோல் பாவித்தாலும் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதாம்!
- Sunday, 30 August 2015 15:44
பரம்பரையாக புற்றுநோய் தாக்கி வரும் நபராக நீங்கள் இருந்தால் அல்கொஹோல் பாவிப்பதை அது மிகச் சிறிய அளவாக இருந்தாலும் உடனே நிறுத்துவது எப்படி என்பதை நீங்கள் ஆலோசிப்பது மிகுந்த பயனளிக்கும் என சமீபத்தில் மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால் சொற்பளவு அல்கொஹோல் உடலுக்குள் சேர்ந்தாலும் அது புற்றுநோயை ஊக்குவிக்கின்றது முக்கியமாகப் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது என்பதாகும்.
BMJ எனப்படும் பிரிட்டனின் மருத்துவத் துறை சார்ந்த பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவில் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களிலும், பெண்களிலும் ஒருநாளில் மிகச் சிறியளவில் அவர்கள் எடுக்கும் அல்கொஹோல் கூடப் புற்று நோயைத் தூண்டும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வானது அமெரிக்காவில் இரு வகைகளில் கடந்த 30 வருடங்களாக சுமார் 135 000 பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப் பட்டிருந்தது. இதனை பொது மக்கள் சுகாதாரத்துக்கான ஹார்வார்ட் TH Chan பள்ளி, Brigham மற்றும் பெண்கள் மருத்துவமனை, பாஸ்டனிலுள்ள ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் Massachusets ஆகிய கல்வி மையங்கள் இணைந்து புற்று நோய் தாக்கும் மக்கள் மத்தியில் மேற்கொண்டிருந்தன.
முக்கியமாக உடற் பருமன், புகைத்தல், மது அருந்துதல் மற்றும் குடும்பப் பரம்பரைப் பின்னணி ஆகிய காரணிகளுக்கும் புற்று நோய்க்குமான தொடர்பை இவர்கள் ஆராய்ந்தனர். இதன் போது சொற்பளவில் இருந்து நடுத்தர அளவு வரை அதாவது பெண்கள் எனில் ஒரு நாளைக்கு இரு கோப்பை அல்கொஹோல் மற்றும் ஆண்கள் எனில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கோப்பை அல்கொஹோல் எடுப்பவர்களுக்கு கூட புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகளவில் உள்ளதாக இந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பெண்கள் நடுத்தர அளவுக்கு அல்கொஹோல் எடுப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு 13% வீதம் புற்று நோய் தூண்டப் படும் எனவும் இது ஒப்பீட்டளவில் ஆண்களை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களின் மார்பகங்களிலுள்ள உள்ள திசுக்கள் அல்கொஹோலிலுள்ள எஸ்ட்ரோஜென் மற்றும் அன்ட்ரோஜென் மட்டங்கள் அதிகரிப்பால் பாதிக்கப் படும் எனவும் இதனால் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு ஊக்கமடையும் என்றும் எச்சரிக்கப் படுகின்றது.