விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் உயிர் வாழ்க்கை என்பதன் அர்த்தம் யாது? அதற்கு முடிவு உண்டா? நமது அறிவின் படி எமது பிரபஞ்சம் மீண்டும் ஒரு ஒருமை நிலைக்குத் திரும்பி நாம் பெற்றிருக்கும் அனைத்துக் கல்வியும், தகவல்களும் அழிந்து விடுமா? போன்ற கேள்விகள் எமக்கு எழுவது சாதாரணமானது ஆகும்.
உண்மையில் வாழ்க்கையின் அர்த்தம் குறித்து விஞ்ஞானம் எதுவுமே கூறாது என்று தான் சொல்ல வேண்டும்.
இதை அறிய வேண்டினால் நீங்கள் மதகுருமார்களையோ அல்லது தத்துவ வாதிகளையோ தான் நாட வேண்டும். ஆனால் விஞ்ஞான அணுகுமுறையின் படி எமது பிரபஞ்சம் மீண்டும் ஒருமுறை ஒருமை நிலைக்கு (Singularity) இற்குத் திரும்பாது என்றும் அதன் விரிவாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் வேகத்தில் நீடித்துக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியும். அவதான அடிப்படையிலும், சார்புக் கொள்கை மற்றும் கரும் சக்தியின் செயற்பாடு அடிப்படையிலான கணித சமன்பாடுகளின் படியும் தான் இவ்வாறு பிரகடனப் படுத்தப் படுகின்றது.
ஆனால் பிரபஞ்சம் விரிவடைவது மேலும் மேலும் அதிகரிக்கையில் நட்சத்திரங்களை ஒளியூட்ட மிகவும் குறைவான சக்தியே மிஞ்சி வரும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இதன் இறுதிக் கட்டத்தில் நாம் உறுதிபட மிகவும் குளிரான இருண்ட ஒரு பிரபஞ்சத்தையே பார்வையிட நேரிடும். பிரபஞ்ச விரிவாக்கத்தின் இந்த விளைவு ஏதுமற்ற ஒரு நிலைக்கும் இட்டுச் செல்ல முடியும். ஆனால் இதற்கு நாம் நினைத்துப் பார்க்க முடியாத நீண்ட காலம் தேவைப் படும். வருங்கால காலத்தின் திசை என்பது கட்டுப்படுத்தப் படாத ஒன்று என்பதால் இந்த ஒரு நிலை கூட அனைத்து வெளிப்பாடுகளினதும் முடிவு எனக் கொள்ளவும் முடியாது.
உயிரினங்களின் இயக்கத்துக்கு ஆதாரமானது வெப்பம் எனலாம். மனித இனம் நிகழ்காலத்தில் நன்கு அறிந்துள்ள வெப்ப இயக்கவியல் கல்வியின் அடிப்படையில் கூட பிரபஞ்சம் வருங்காலத்தில் ஒருமை நிலைக்குத் திரும்புவது என்பது சாத்தியமற்றதாகும். வெப்ப இயக்கவியல் கூறான எண்ட்ரோபி (Entropy) என்பது சக்தியைப் போன்று சமநிலைத் தன்மை (conservation)கொண்டதல்ல. அது எப்போதும் ஒன்று அதிகரிக்கும் அல்லது அதே நிலையில் இருக்கும். ஆனால் குறைவடையாது எனவே இந்த இயல்பின் அடிப்படையில் பிரபஞ்சம் மீண்டும் ஒருமை நிலைக்குத் திரும்ப முடியாது என்றும் விளக்கப் படுத்தப் படுகின்றது.
இதேவேளை Big Crunch என்ற கொள்கை அடிப்படையில் விரிவடையும் எமது பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தன் விரிவாக்கத்தை நிறுத்தி மீண்டும் ஒருமை நிலைக்குத் திரும்பும் என்றும் கூறப்படுகின்ற்து.
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்