நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடித்த ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கியவர் இரா.சரவணன். ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி ஆகியோர் நடித்துவரும் தன்னுடைய 2-வதுபடத்தை இயக்கிவருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சமுத்திரகனி எப்படி நடிக்க வந்தார் என்பதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் கத்துக்குட்டி சரவணன்:
அவர் தன்னுடைய பதிவில்:“சசிகுமார் சார் மூலமாக எனக்குப் பழக்கமானவர் சமுத்திரக்கனி சார். தற்போது இயக்கிவரும் படத்தின் கதையைச் சொன்னபோதே, ‘இதில் ஜோதிகா மேடம்க்கு கணவரா நடிக்கப் போறது கனிதானே...’ என்றார் சசிகுமார். காரணம், அவர் பாத்திரம் அப்படிப்பட்டது. ஆனால், கனி சார் அப்போ செம பிஸி. ஒருவழியாய் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படப்பிடிப்பில் வைத்து சமுத்திரக்கனி சாரிடம் கதை சொன்னேன். அப்போது அவர் என்னிடம், ‘இந்தப் படத்தில் பெரிசா நிற்கப்போறதே சூரி கேரக்டர்தான். இத்தனை நாள் அவனை காமெடியனா மட்டும்தான் பார்த்திருப்போம். இதில் ரொம்பவே கலங்கடிச்சிடுவான்’ என்றார். மேலும் கனி சார் என்னிடம் ‘இப்போ என்னால தேதி ஒதுக்கவே முடியாத சூழல். ஆனாலும் எப்படியாவது தந்திடுறேன்’ என்றார். ஒரு பக்க வசனம் என்றாலும், ‘ஒரு தடவை சொல்லுங்க பார்ப்போம்’ எனக் கேட்டு அதை அப்படியே பேசி ஸ்பாட்டில் அசத்திவிடுவார். அநியாய ஞாபக சக்தி.
மொத்த உறவினர்கள் மத்தியில் அவர் ஸ்தம்பித்து நிற்பது மாதிரியான ஒரு காட்சி. அன்றைக்கு அவருக்கும் எனக்கும் ஒரு சிறு மன வருத்தம் வேறு. காட்சிக்குத் தக்கபடி நிலைகுலைந்த மனிதராக நின்றபடி அவர் வசனம் பேச, என்னையும் அறியாமல் போய் ‘அற்புதம் ஸார்’ என்றேன். வருத்தம், ஈகோவை எல்லாம் நாம்தான் மனதில் தூக்கிக்கொண்டு திரிவோம். ஆனால், அடுத்த நொடியே தோளில் கைப்போட்டு நம்மைத் தோற்கடித்து விடுவார் கனி சார். அவருக்கு பிடிக்காத விஷயம் மற்றவர்கள் மீது கோபப்படுவது/ இன்று அவர் பிறந்த நாள். எங்கள் படத்தின் சற்குணம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.