ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுடைய சுயமரியாதை மட்டுமே ‘சலுகை’யை அல்ல என்கிற கருத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது ‘கர்ணன்’.
தனுஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்ராஜ், பூ ராம் எனப் பிரபல நடிகர்கள் குவிந்திருந்த இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பு மற்றும் எதிர்ப்புக்கு ஏற்ப வசூல் கிடைக்கவில்லை. படம் நஷ்டத்தையே சந்துள்ளது என தற்போது விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
என்றாலும் படம் உருவாக்கிய நல்லெண்ணத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது சமூக வலைப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில்: ‘கர்ணன் படத்தின் ‘மாபெரும்’ வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இதன்பிறகே இந்தக் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கும்.