தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்திருப்பதால் திரைக்கு வரவிருந்த எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;
அன்புள்ள ஊடக மற்றும் திரையுலக நண்பர்களே,
எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.
எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம், எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.