Saturday, May 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

அதியசங்கள் ஏழு பழயவை அல்ல புதியவை

பல உலக விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் தெரியாத விஷயங்கள் என்று நிறையவே உள்ளன.

அவற்றில் உங்களுக்கு உலகின் பழைய மற்றும் புதிய ஏழு அதிசயங்கள் எவை என்று தெரியுமா? அவை எதற்கு எப்போது கட்டப்பட்டது என்று தெரியுமா? அப்படி உங்களுக்கு தெரிந்திருந்தால் சமத்தான சுட்டிகள். தெரியவில்லையா வாருங்கள் இம்முறை உலகின் ஏழு அதிசயங்களை பற்றித் தெரிந்து கொள்வோம்.

மனிதனால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்களையும் இயற்கையான அதிசயங்களையும்தான் உலக அதியங்களா குறிப்பிடப்படுகின்றன. இவை பழங்காலத்திலிருந்து இன்றுவரை பட்டியலாக தொகுக்கப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் உருவாக்கப்படுகிறதாம்

பழைய ஏழு அதிசயங்களை பழங்காலத்தில் "சிடோனின் அண்டிப்பேற்றர்" என்பவர் பட்டியலிட்டார் என்று பொதுவாக கருதப்படுகிறதாம்.

இவைகள்தான் உலகின் பழைய ஏழு அதிசயங்கள்:


கிசாவின் பெரிய பிரமிட் - இது கி.மு.2680ல் கட்டிமுடிக்கப்பட்டாதாக கணக்கிடப்பட்டுள்ள எகிப்திய பழங்கால அரசன் பாரோ கூபுவின் சமாதியாம்.

பபிலோனின் தொங்கும் தோட்டம் - இது கி.மு. 600ல் ஈராக்கில் கட்டப்பட்டதாம்.

ஓலிம்பியாவின் ஸேயுஸ் சிலை - இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கச் சிற்பி பீடியாஸ் என்பவரால் இன்றைய கிரீஸில் செதுக்கப்பட்டதாம்

எபேசஸ் ஆர்ட்டெமிஸ் கோயில் - இது கி.மு.350ல் இன்றைய துருக்கியில் எபேசஸ் என்ற இடத்தில் கட்டப்பட்டதாம். இது ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயிலாம்.

ஹலிகர்னாசஸ்ஸின் மௌசோல்லொஸின் மௌசோலியம் - இது கி.மு 350- கிமு 353 இடையில் பாரசீக சத்ரப்பினால் இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்ற இடத்தில் கட்டப்பட்டதாம். இது பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு கட்டப்பட்ட சமாதியாம்.

ரோடொஸின் கொலோசஸ் - இது கி.மு. 280ல் தற்கால கீரீசில் எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான சிலை. இது கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக கட்டப்பட்டதாம்.

அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் - இது கி.மு. 3ம் நூற்றாண்டில் இன்றைய எகிப்தில் சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டதாம்.

இவ் பழைய ஏழு அதிசயங்களில் இப்போது மிஞ்சியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. மற்றவை யாவும் சிதைவடைந்தும் உடைந்தும் போய்விட்டதாம்.

இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு உலகின் புதிய ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதாம். இதற்காக நியூ 7 ஒன்டர்ஸ் அரக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை நடத்தியதாம். இதில் பல பிரபலமான கட்டிடச் சின்னங்களைக் கொண்ட பெரும் பட்டியலை வெளியிட்டு அதன் மூலம் வாக்கெடுப்பு நடைப்பெற்றதாம். பல விமர்சனங்கள், எதிர்ப்புக்களைத்தாண்டி வெற்றிப் பெற்றது உலகின் புதிய ஏழு அதிசயங்கள். அத்துடன் 7ம் மாதம் 7ம் திகதி 2007ம் ஆண்டிலேயே இப் புதிய ஏழு உலக அதிசயங்களையும் அறிவித்திருக்கிறார்கள். அவையாவன:

சிச்சென் இட்சா

 - (Chichen Itza) இது மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்ற இடத்தில் கட்டப்பட்டப்பட்ட கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம்மாம். இது மாயன் நாகரீகக் காலத்தை சேர்ந்ததாம்.

மீட்பரான கிறிஸ்துவின் சிலை (கிறிஸ்து தி ரீடிமர்)


- (Christ the Redeemer) இது 1922-இல் இருந்து 1931-குள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோவில் கட்டப்பட்டதாம். அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது இச் யேசு கிறிஸ்துவின் சிலை.

கொலோசியம்

- (Colosseum) இது கி.பி. 80ம் ஆண்டில் ரோம் நகரில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கம். இது பயங்கரமான குற்றவாளிகளுடனும் விலங்குகளுடனும் சண்டையிடுவதற்காக பண்டைய ரோமப் பேரரசன் வெஸ்பாசியன் இதை கட்டத் தொடங்கிவிட்டாராம். அரங்கின் நடுவே போட்டிகள் நடக்கும் போது அதனைச் சுற்றி அதை பார்க்கும் மக்களுக்காக வட்டமாக படிகள் அமைத்திருந்தார்களாம்.

சீனப் பெருஞ் சுவர்

 - (Great Wall of China) இது ஆறாம் நூற்றாண்டில் சீனப் பேரரசைக் காப்பதற்காக கட்டப்பட்ட அரணாம். இப் பெருஞ்சுவர் 6,400கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறதாம்.

மச்சு பிச்சு

 - (Machu Picchu) இது 1450ம் ஆண்டில் பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கட்டப்பட்ட ஒரு பழைய நகரம். இது இன்கா பேரரசு காலத்து வரலாற்று சின்னமாக கருதப்படுகிறதாம். இங்கு சூரியனுக்கு கட்டப்பட்ட "இன்டிகுவாட்டானா" என்ற கோயில் இதன் முக்கிய பகுதியாம். இப்போது இந் நகரம் சுற்றுலா தளமாக உள்ளது.

பெட்ரா -(Petra) இது கி.மு 1200ம் ஆண்டில் ஜோர்டான் நாட்டில் கட்டப்பட்ட தொல்பொருள் நகரமாம். இதன் பாறை கட்டமைப்பு மற்றும் தண்ணீர் குழாய் அமைப்பும் பிரபலமானதாம்.

தாஜ் மகால்

 -(Taj Mahal) உலக அளவில் பலருக்கும் தெரிந்த நினைவுச் சின்னமான தாஜ்மகால் 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்குள் முகலாய மன்னன் ஷாஜகானால் கட்டப்பட்டது. இது இந்தியா ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவது பளிங்குக் கற்களால் கட்டப்பட்டதாம்.

கிசா பிரமிடு வளாகம்

- (Giza Pyramid Complex) இவைகளுடன் மதிப்புமிக்கது என்று கௌரவத்தை கொண்டு கிசா பிரமிட் வளாகமும் இப் பட்டியலில் அடங்கியுள்ளது. மிகப் பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இக் கிசா பிரமிட்டுகளே. இப்போது இவ் எட்டும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இடமாக உள்ளது.

இவைகளின் கலை நயம், பிராம்மாண்டம், கட்டிட அமைப்பு, அழகு என பலவற்றை கண்டு வியந்துதான், உலக அதிசயங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாம். இவ் ஏழு அதிசயங்களை விட வேறு பல அதிசயங்கள் உருவாக்கப்பட்டுதான் உள்ளது.

ஆக உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் இவ் ஏழு அதிசயங்களில் ஒன்றையாவது நேரில் சென்று பாருங்கள். அதன் உண்மையான அழகையும் அதிசயத்தையும் உங்களால் உணர முடியும். இப்போது உலகின் ஏழு அதிசயங்களை பற்றி அறிந்து கொண்டீர்களா!

- ஹரிணி

comments powered by Disqus